பறவைக் கோலங்கள்

கோலங்கள், குறிப்பாக மார்கழி மாதத்தில் வாசலில் இடப்படும் கோலங்கள் எப்போதுமே நம்மை வியக்க வைக்கும். சிறு வயதில் அம்மா காலையிலும் மாலையிலும் வாசல் கூட்டி, நீர் தெளித்து, சில வேளைகளில் சாணியையும் கரைத்து மெ ழுகிய பின் இடும் அழகான கோலங்களைக் கண்டு வியந்திருக்கிறேன். தஞ்சை கரந்தையில், எங்கள் வீட்டின் வாசலில், மார்கழி மாதக்  குளிரான காலை நேரங்களில் அம்மா கோலமிடும் போது தூக்கக் கலக்கத்துடன் நானும் என் தங்கையும் கோலத்தின் அருகில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம். அதிகாலையில் மிகுந்த சிரத்தையுடன் பெரியதாகவும், சிக்கலாகவும் இடப்படும் கோலம் மாலையில் எளிமையானதாக இருக்கும். ஆனாலும் அழகில் குறைவாக இருக்காது.

மார்கழி கோலம்
மார்கழி கோலம்

அம்மாவின் கோலங்கள் மட்டும் அழகல்ல, அவள் கோலமிடும் விதமும் அழகுதான். முந்தைய நாளே அல்லது வாசலைக்  கூட்டும் போதே கோலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பாள் போலும். கோலமிடும் தருணம் வந்தபின் திண்ணையின் அருகில் இருக்கும் மாடத்திலிருந்து (அப்போது எங்கள் விட்டில் திண்ணையும் இருந்தது மாடமும் இருந்தது) கோலமாவுக்  கிண்ணத்தை எடுத்து வருவாள். கூட்டிய தரையை ஒரு கணம் உற்றுப் பார்த்து எந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டுமோ அங்கே நிற்பாள். பிறகு குனிந்து கோலமாவை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் இடையில் கெட்டியாகப் பிடித்து அள்ளி சீராகப்  புள்ளிகளை வைத்து கோலமிட ஆரம்பிப்பாள்.

மாலை வேளைகளில் எளிமையான சிறிய கோலங்களைக்  குனிந்து ஒரே மூச்சில் புள்ளி வைத்துக்  கோலமிட்ட பின்னரே நிமிர்நது   நிற்பாள். இவற்றில் பெரும்பாலும் மூன்று புள்ளி, மூன்று வரிசை சிக்குக்  கோலம் அல்லது தாமரைக் கோலம் தான் அதிகமாக இருக்கும். அவள் இடும் எளிமையான கோலங்கள் தான் எனக்குப் பிடித்தவை. அம்மா வாங்கி வைத்திருக்கும் கோலப்புத்தகத்தைப் பார்த்து சில வேளைகளில் நானும் எனது தங்கையும் அந்தக் கோலங்களை சிலேட்டில் வரைந்து பழகிக்கொள்வோம். ஆர்வமிருந்தாலும் ஆண் பிள்ளை கோலமெல்லாம் போடக்கூடாது எனப்  பலர் கேலி செய்ததால் வெட்கப்பட்டு இந்த அருமையான கலையைத்  தொடர்ந்து கற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டேன். இப்போதெல்லாம் கோலங்களைப் பார்த்து ரசிப்பதோடு சரி.

அம்மா சில வேளைகளில் அரிசி மாவிலும் கோலமிடுவது உண்டு. ஒரு நாள் காலை வீட்டினுள் இருந்தபடியே வாசலைப் பார்த்த போது காகம் ஒன்று பக்கவாட்டில் தனது தலையைச் சாய்த்து அலகால் கோலத்தைச்  சுரண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. விவரம் தெரிந்த பின் நான் முதன் முதலில் காகத்தைப் பார்த்தது அந்தத் தருண மாகத்தான் இருக்கும். பின்னர் அருகில் சென்று பார்த்த போது எறும்புகளும் அந்தக் கோலத்தை மொய்த்துக் கொண்டிருந்தன.

சிறு வயதில் நான் பார்த்திருந்த எங்கள் தெருவின் மார்கழி மாதக் காலை அழகாக இருக்கும். பொழுது புலரத் தொடங்கி, பொழிகின்ற பனி சற்றே விலகிப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், ஆள் அரவம் அதிகமில்லாத காலைப் பொழுதுகளில் தெருக்கோடி வரை பார்க்க முடியும். சட்டை போடாத தாத்தாவின் தலைமையில் சிறு கூட்டம் ஒன்று (பெரும்பாலும் டிராயர் போட்ட சிறுவர்கள்தான்) பஜனை பாடலைப் பாடிக் கொண்டு கடந்து செல்லும். மார்கழிக்  கடைசியில் தெருவில் கோலப் போட்டி வைப்பார்கள் எனவே தெருவில் உள்ள எல்லா வீட்டின் வாசலிலும் பெண்கள் மும்முரமாக கோலமிட்டுக் கொண்டிருப்பார்கள்.

காலங்கள் செல்லச் செல்ல வழக்கம் போல பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன  எங்கள் தெருவிலும், வாழ்விலும். வயதாகிவிட்டதால், முதுகு வலியினால் அவதிப்படும் அம்மா இப்போதெ ல்லாம் கோலமிடுவதில்லை. பணி நிமித்தம் வெளியூரில் வசிப்பதால் பொங்கலுக்குக் கூட எப்போதாவதுதான் வீட்டுக்குப் போகமுடிகிறது. எனினும் சென்ற ஆண்டு பொங்கல் தினங்களில் வீட்டில் இருந்தது நிறைவாக இருந்தது. மொட்டை மாடியில் மாக்கோலமிட்டு பொங்கல் கொண்டாடினோம்.

மொட்டைமாடியில் பொங்கலோ பொங்கல்
மொட்டைமாடியில் பொங்கலோ பொங்கல்

இப்போதெல்லாம் பொங்கல் என்றால் என் போன்ற பறவை ஆர்வலர்கள் மும்முரமாக இருப்பது பறவை கணக்கெடுப்பிற்காகத்தான். ஆம் நான்கு  ஆண்டுகளாக இந்த பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு வீட்டுக்குச் சென்ற போது பறவைகளை நோக்க வெகுதூரம் பயணிக்க முடியவில்லை. ஆகவே, வீட்டிலிருந்தும், தெருவிலிருந்தும் பலவகையான பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டின் எதிரில் இருக்கும் அரச மரத்தில் குக்குருவான்களையும், மைனாக்களையும், குயில்களையும், தெருவில் பறந்து திரிந்து மின்கம்பிகளில் அமர்ந்து கொண்டிருக்கும் காகங்களையும், கட்டைச் சுவர்களின் வாலை இப்படியும் அப்படியுமாக திருப்பிக் கத்திக்கொண்டே கூட்டமாக மாடிவிட்டு மாடிதாவும் தவிட்டுக்குருவிகளையும், காகங்களின் விரட்டலில் இருந்து இறக்கைகளை அசைக்காமலேயே இலாவகமாக காற்றில் மிதந்து விலகிச் செல்லும் கரும்பருந்துகளையும், கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் உண்ணிக் கொக்குகளையும், கவனித்துக் கொண்டே தெருவில் நடைபோட்டுக் கொண்டிருந்தேன்.

அவ்வப்போது பலரின் வீட்டு வாசலில் இருந்த கோலங்களையும் பார்த்து ரசித்தவாறே சென்றேன். சில கோலங்கள் மிகவும் அழகாகவும், சில சுமாராகவும் இருந்தன. ஆனால் சில சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருந்தன இது போன்ற கோலத்தைச் சுற்றி யாரும் அதை மிதிக்கக்கூடாதென கற்களை வேறு வைத்திருந்தது மேலும் வேடிக்கையாக  இருந்தது. கலர் கோலமாவில் போடப்பட்ட கோலங்களே அதிகம். கோலத்தின் நடுவில் சிலரது வீட்டில் மட்டுமே பரங்கிப் பூவை சாணியில் குத்தி வைத்திருந்தனர். பெரும்பாலும் பொங்கல் பானையும், கரும்பும் கொண்ட கோலங்கள் தான் அதிகம். எனினும் சில பறவைகளைக்  கோலங்களிலும் கண்டேன். பச்சைக்கிளி, மயில், இன்னவென்று அடையாளம் காணமுடியாத வாத்து, குருவி இவையே கோலங்களில் அதிகமாகத் தென்பட்டன.

வாத்து கோலம்
வாத்து கோலம்

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பைப்  பிரபலப்படுத்த கோலங்களைக் கொண்ட விளம்பரத்தாள்களை தயாரிக்கலாமே என யோசனை தோன்றியது. நண்பர் செல்வகணேஷிடம் கேட்ட போது அவரது தங்கைகள் பிரியதர்ஷினியும், பிரியங்காவும் (இருவருமே பறவை ஆர்வலர்களும் கூட) இட்ட கோலத்தை படமெடுத்து பகிர்ந்தார்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2017_ கோலம்_பிரியதர்ஷினி & பிரியங்கா
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2017_ கோலம்- பிரியதர்ஷினி & பிரியங்கா
செம்மீசை சின்னான் (Red-whiskered Bulbul) கோலம் - சிவக்குமார்.
செம்மீசை சின்னான் (Red-whiskered Bulbul) கோலம் – சிவக்குமார்.

அது போலவே திருவண்ணாமலையிலிருந்து பறவை ஆர்வலரும், ஓவியருமான நண்பர் சிவக்குமார் செம்மீசை சின்னானை கோலமிட்டு படமெடுத்து அனுப்பினார். இந்த ஆண்டு பெங்களூரிலிருந்து நண்பரும், பறவை ஆர்வலருமான வித்யா சுந்தர் மார்கழி மாதத்தில் அவரது வீட்டு வாசலில் மிக அழகாகப்  பல வகையானப்  பறவைகளைக்  கோலமிட்டு அவற்றின் படங்களை அனுப்பினார். அவரே இந்த ஆண்டு பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பிற்கான விளம்பரத் தாளுக்கு ஒரு அழகிய கோலத்தை வரைந்து அனுப்பினார். அடுக்குமாடிக் குடியிருப்பில், வாசல் சிறியதாக இருப்பதால் பெரிய கோலங்களைப்  போட முடிவதில்லை எனக் குறைபட்டுக் கொண்டார். எனினும் சிறிய வாசலாக இருந்தாலும், யாரும் அதிகம் பார்க்க வாய்ப்பில்லாத இடத்தில் கூட இது போன்ற அழகான, துல்லியமான  படைப்புகளை ஆர்வத்துடன் செய்வது பாராட்டத்தக்கச் செயல்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2018_கோலம் - வித்யா சுந்தர்
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2018_கோலங்கள் – வித்யா சுந்தர்

அம்மாவுக்கு உடல்நிலை சரியாக இருந்திருந்தால் பறவையின்  கோலத்தை இடுமாறு கேட்டிருப்பேன். நிச்சயமாக அவளும் என்னை ஏமாற்றி இருக்க மாட்டாள். அண்மைக் காலங்களில் எனது தங்கையும் அழகாகக் கோலங்களை இட்டு அவ்வப்போது படங்களை அனுப்பிக் கொண்டிருந்தாள். ஆகவே அவளிடமும் பறவையுள்ள ஒரு கோலத்தை இடுமாறு கேட்டிருந்தேன், முயல்கிறேன் என்றாள். ஓரிரு நாட்களுக்குப் பின் ஒரு கோலத்தின் படத்தை அனுப்பி இது ‘ஓகேவா’ எனக் கேட்டிருந்தாள். அது பறவைகளின் மூதாதையர்களான டைனசோர் போல இருந்தது. எனினும் அவளை ஏமாற்றமடையச் செய்யவேண்டாம் என்பதால் “சூப்பர், கோலத்தை சுற்றி கற்களை வைக்கவும்” என்று பதில் அனுப்பினேன். அது முதல் அவள் போட்ட கோலங்களின் படங்களை எனக்கு அனுப்புவதே இல்லை.

கோலப் பறவைகள்” எனும் தலைப்பில் 27 ஜனவரி 2018 அன்று தி இந்து தினசரி உயிர்மூச்சு இணைப்பில் வெளியான கட்டுரையின் முழு பதிப்பு. அக்கட்டுரையின் உரலி இங்கே