சிறு வயதில் ஒரு அருமையான கனவு எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கும். கனவில் நான் பறந்து கொண்டிருப்பேன். பறந்தேன் என்று சொல்வதை விட மிதந்தேன் என்பதே சரியாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தமான கனவு அது. கனவில் என்னால் தரையில் இருந்து எந்த வித உதவியும் இல்லாமல் அப்படியே மேலே எழும்பி மிதக்க முடியும். இறக்கைகள் எதுவும் இருக்காது ஆனாலும் உயரே படிப்படியாக மேலே செல்லவும், தேவைப்படும் போது கீழே வரவும் முடியும். எல்லா கனவுகளைப் போலவும் எதுவும் தெளிவாக இருக்காது, விழித்தவுடன் கண்டத்தில் பாதிதான் நினைவில் நிற்கும். ஒரு வேளை சூப்பர்மேன், பேட்மென் போன்ற காமிக்ஸ் புத்தங்கங்களை சிறு வயதில் படித்துக் கொண்டிருந்ததால் வந்த விளைவோ என்னவோ. இப்போதெல்லாம் அது போன்ற கனவுகள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் கிளம்பிப்போகும் இரயில் அல்லது பேருந்தை பிடிக்க அவற்றின் பின்னால் ஓடுவது போன்ற கனவுகள் தான் வருகிறது. ஆனாலும் என்னதான் முயற்சி செய்தாலும் அவற்றைப் பிடிக்கவோ, வேகமாக ஓடவோ முடியாது, எதிர்க்காற்றில் சைக்கிள் மிதித்துக் கொண்டு செல்லவது போல சிரமமாக இருக்கும்.

இரண்டு மாதங்களுக்கு முன் அப்படி ஒரு கனவு. ஒரு இரயில் நிலையத்தில் வண்டி நிற்கிறது. நான் இறங்கி வெளியே பறவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரயில் கிளம்பிவிடுகிறது. ஓடிப் பிடிக்க முயற்சிக்கிறேன், முடியவில்லை. வெளியே வந்து ஒரு காரில் விட்ட இரயிலை அடுத்த நிலையத்தில் பிடிக்கப் பயணிக்கிறேன். அப்போது கைபேசி ஒலித்தது. கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்து வெளியே பார்த்தால் வண்டி நான் இறங்க வேண்டிய திருநெல்வேலியையும் தாண்டி நாசரெத் எனும் இடத்தில் நின்றுகொண்டிருந்தது. பிறகு பஸ் பிடித்து திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன். இது போன்ற கனவுகளை எல்லாம் அவ்வப்போது எழுதி வைத்திருந்திருக்க வேண்டும். எதோ கொஞ்சமாவது எழுத்தில் நிலைத்து இருந்திருக்கும்.
வெகு சில கனவுகள் மனதில் நீக்கமறப் பதிந்திருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் நீலகிரி மலைத்தொடரில் உள்ள அவலான்சி எனும் இடத்திற்கு பணி நிமித்தம் சென்றிருந்தேன். சென்றடைந்த நாள் இரவு ஒரு விராலடிப்பானைக் (Osprey) காண்பது போன்றதொரு கனவு வந்தது. அதை நண்பர்களுடன் மறுநாள் காலையில் பகிர்ந்து கொண்டேன். பின்னர் அதே நாள் அங்கே உள்ள மேல் பவானி அணை வழியாக சென்று கொண்டிருந்த போது நாங்கள் விராலடிப்பானைக் கண்டோம். இந்தப் பறவையை பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு அங்கே போகவில்லை. எனினும் எதிர்பாராத விதமாக கனவில் கண்டதை நேரில் பார்த்து மட்டட்ட மகிழ்ச்சியைத் தந்தது.

அண்மைக் காலங்களில் கனவுகளே அதிகம் வருவதில்லை. அதுவும் நான் காற்றில் மிதப்பதைப் போன்ற கனவுகள் வருவதே இல்லை. அந்த ஏக்கம் மனதில் இன்றும் இருக்கிறது. கருங்கழுகு (Black Eagle) மரக்கவிகையின் மேல் சலனமில்லாமல் தவழ்ந்து செல்வதைப் பார்க்கும் போதெல்லாம் சிறு வயதில் மிதப்பது போல் நான் கண்ட கனவு நினைவிற்கு வரும். இப்போதெல்லாம் தூங்கும் போது காணும் கனவுகளை விட விழித்துக்கொண்டே காணும் கனவுகள் தான் அதிகம். அவற்றில் பல பறவைகளைப் பற்றியதே. எனினும் அவை பகல் கனவுகள் அல்ல! காலத்திற்கும் வயதிற்கும் ஏற்ப கனவுகளும் நிலைமாறிக்கொண்டும், அதிகரித்துக் கொண்டும் இருக்கின்றன. இந்தக் கனவுகள் யாவையும் மெய்ப்பட வைக்க பல குறிக்கோள்கள் என் முன்னே குவிந்து கிடக்கின்றன. இவற்றில் எனக்கானவை சில, பறவைகளுக்கானவை பல.
எனக்கான குறிக்கோள்கள்
நான் பறவைகளைப் பார்த்துப் பழகியது 1996 முதல். கானுலாக்களின் போதும், களப்பணியின் போதும் பறவைகளைப் பார்த்து அடையாளம் கண்டு, பட்டியலிட்டு அதையெல்லாம் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன். இதனால் தான் இருந்து இந்த இடத்தில் இருந்து, இந்தத் தேதியில், இத்தனை வகையான பறவைகளை நான் பார்த்து வந்திருக்கிறேன் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. நான் மட்டுமல்ல, எந்த ஒரு பொறுப்பான இயற்கை ஆர்வலரும் இதைத் தான் செய்து கொண்டிருப்பார்கள். அண்மைக் காலங்களில் 2013ல் இருந்து eBird எனும் இணைய தளத்தில் நான் பார்க்கும் பறவைகளையும், அவற்றின் எண்ணிக்கையையும், அவற்றின் குணாதிசயங்களையும், எங்கே, எந்த நேரத்தில், பார்க்க்கப்பட்டது போன்ற விவரங்களை பதிவு செய்து கொண்டிருக்கிறேன். நான் சமர்ப்பிக்கும் விவரங்களை யார் வேண்டுமானாலும் அந்த இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொள்ள முடியும். இதனால் பறவைகள் பாதுகாப்பிற்கு உதவமுடியுமா என்றால் முடியும். பறவை ஆர்வலர்கள் அனைவரும் இது போன்ற ஒரே இணையதளத்தில் தங்களது தரவுகளை பதிவு செய்வதன் மூலம் பறவைகளின் பரவல், எந்த காலத்தில் அவை எந்த இடத்தில் உள்ளன, அவற்றின் எண்ணிக்கை அதிகமாகிறதா அல்லது குறைகிறதா என்பதை எல்லாம் அறிந்து கொள்ள முடியும். இந்த தரவுகள் யாவையும் பறவை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே சேகரிக்க பல காலம் ஆகலாம். ஆனால் பொதுமக்கள் அனைவரும் இது போன்ற மக்கள் அறிவியல் (citizen science) திட்டங்களில் இடைவிடாமல் பங்கு கொண்டால் குறைந்த காலத்தில் ஓரளவிற்கு பல வகையான பறவைகளின் நிலையை அறிந்து கொள்ள முடியும். அவற்றின் நிலையை அறிந்து கொண்டால் அவை வாழும் இடங்களின் நிலையையும் அறியலாம். அதன் மூலம் அவற்றின் வாழிடங்களை பாதுகாக்கவும் முடியும். நாம் ஒவ்வொருவரும் பறவைகளைப் பார்ப்பதை ஒரு பொழுதுபோக்காக ஆரம்பித்து படிப்படியாக இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்களிப்பதன் மூலம் நாம் பார்த்து ரசிக்கும் பறவைகளை பாதுகாப்பதில் மறைமுகமாக பங்களிக்கிறோம். சரி இப்போது எனது கனவுகளுக்கு வருவோம்.
பாறு கழுகுகள் எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்து அற்றுப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஆகவே இந்தியாவில் தென்படும் 9 வகை பாறு கழுகுகளையும் (பிணந்திண்ணிக் கழுகுகள்) பார்த்து விட வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவு 2014ல் மெய்ப்பட்டது. இந்தியாவின் பல மூலைகளுக்குச் சென்று அவற்றைக் கண்டேன். அப்போதுதான் உதித்தது பறவைகளை தினமும் பார்க்கும் யோசனை.
![Egyptian vulture. Photo: By PJeganathan [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], via Wikimedia Commons](http://blog.ncf-india.org/wp-content/uploads/2017/10/1024px-Egyptian_vulture_jorbeed_bikaner_JEG4355_12X8-1024x684.jpg)
பறவைகளைப் பல ஆண்டுகளாகப் பார்த்து வந்தாலும் 12 மார்ச் 2014 முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் நான் எந்த இடத்தில் இருந்தாலும் 15 நிமிடங்கள் பறவைகளைப் பார்த்து பட்டியலிட்டு eBirdல் உள்ளிட்டுக் கொண்டிருக்கிறேன். இதை நான் உயிருள்ள வரை தொடர வேண்டும் என்பதே எனது முதல் கனவு.
இந்தியாவில் நான் பல இடங்களுக்கு பறவைகளைப் பார்க்கச் சென்றதை eBirdல் உள்ள காட்சியளிப்பில் கண்ட போது இது வரை இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் 24ல் பறவைகளைப் பார்த்து பதிவு செய்தது தெரிந்தது. எனது அடுத்த முயற்சி மிதமுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சென்று அங்குள்ள பறவைகளைப் பார்த்து பட்டியலிடுவதுதான்.
அப்படியே தமிழ் நாட்டில் எனது பறவை பார்த்தலின் நிலையின் வரைபடத்தைப் பார்த்த போது, இதுவரை நான் போகாத மாவட்டங்களைக் காணமுடிந்தது. எனது இந்த ஆண்டு இலக்கு தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பறவைகளைப் பார்த்து பட்டியலிடவேண்டும் என்பதுதான்.
இது போல பட்டியலிட இன்னும் சில குறிக்கோள்கள் உள்ளன. எனினும் இவை யாவும் எனது தனிப்பட்ட ஆர்வங்கள். இவை சிறிய அளவில் ஏதோ ஒரு வகையில் பறவைகளின் நிலையை அறிய உதவும். எனினும் பறவைகளின் பாதுகாப்பிற்கு இது போன்ற ஒரு சிலரின் தனிப்பட்ட பங்களிப்பு மட்டுமே போதாது.
பறவைகளுக்கான குறிக்கோள்கள்
பறவைகளையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க அவை எங்கெங்கே பரவியுள்ளன என்பதைப் பற்றிய அடிப்படை தகவல் அவசியம். ஒரு சிலரால் எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்தறிவது என்பது இயலாத காரியம். ஆகவே பொதுமக்களையும், பறவைக் கணக்கெடுப்புகளின் மூலம் பறவைகள் ஆராய்ச்சியில் ஈடுபடவும், பறவைப் பாதுகாப்பில் பங்கு கொள்ளவும், ஊக்கமளிக்க வேண்டும்.
பறவைகளை சரியாக அடையாளம் காணுதல், அவற்றை அறிவியல் முறைப்படி கணக்கெடுத்தல், பறவைகளின் வாழிடங்களின் தன்மையை அறிதல், ஆவணப்படுத்துதல் முதலிய அடிப்படை முறைகளை தொடக்க நிலை பறவை ஆர்வலர்களுக்கு எளிய மொழியில் எழுதியும், காணொளிப்பதிவுகள் மூலமும், களத்திலும் பயிற்சி அளிக்க வேண்டும்.
இந்தச் சூழலில் பறவைகளின் பங்களிப்பு பற்றி பொதுமக்கள் அனைவருக்கும் எடுத்து சொல்லவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புறவுலகில் நாட்டம் ஏற்பட பறவை பார்த்தலை அறிமுகம் செய்ய வேண்டும். அதை வெறும் பொழுது போக்காக வைத்துக் கொள்ளாமல் புறவுலகின் மேல் கரிசனம் கொள்ளவும், அதன் மூலம் இயற்கை பாதுகாப்பிற்கு பங்களிக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தமிழில் பறவைகள் குறித்த துறைசார் நூல் மென்மேலும் வெளிவர வேண்டும். தமிழத்தின் பல பகுதிகளில் தென்படும் பறவைகளின் பெயர்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியும், சரியான முறையில் பெயரிடவும் வேண்டும்.
பறவை பார்த்தல் என்பது பெரும்பாலும் ஆண்கள் செய்யும் ஒரு செயலாகவே இருந்து வருகிறது. இதில் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு பங்களிக்களிப்பதர்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். பறவைக் கவிஞர்கள், ஓவியர்கள் என பன்முகத்தன்மை கொண்ட பறவை ஆர்வலர்களை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும்.

இது எனது கனவு மட்டுமல்ல என்னைப் போல் இது போன்ற எண்ணற்ற பறவை ஆர்வலர்கள் எண்ணற்ற கனவுகளைச் சுமந்து கொண்டுள்ளனர். ஆகவே தமிழகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களை ஒன்றிணைத்து பறவைகளின், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்காக பாடுபடவேண்டும்.
மொத்தத்தில் பறவைக் கனவுகளை விதைத்து, நேர்மையான, பொறுப்பான செயல்திறம் மிக்க பறவை ஆர்வலர்களையும், பறவைகளுக்காக போராடுபவர்களையும், பறவைகளைப் பற்றி கனவு காண்போரையும் கொண்ட சமூகத்தை, உருவாக்க வேண்டும். அந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பறவையைப் போல காற்றில் ஆனந்தமாக பறந்து செல்வது போன்ற கனவு தினமும் வரவேண்டும்.
—-
“ஒரு பறவை போல மிதக்கிறேனே…”எனும் தலைப்பில் 14 ஜனவரி 2017 தி இந்து தினசரி உயிர்மூச்சு இணைப்பில் வெளியான கட்டுரையின் முழு பதிப்பு. அக்கட்டுரையின் உரலி இங்கே.
Very nostalgic. I wish your dreams come true soon.
சிறப்பான கட்டுரை, சிறப்பான நோக்கங்கள் (கனவுகள்). வாழ்த்துகள்!